திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்துக்குப்பின் நடைபெற்ற தீபாராதனை. படம்: மு.லெட்சுமி அருண்.
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஆனி பெருந்திருவிழா சிறப்புமிக்கது. இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உள்ளிட்ட 5 தேர்களை லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்ப்பர்.
இவ்வாண்டுக்கான ஆனி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தங்க பூங்கோவில் சப்பரத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோயில் திருவிழா மண்டபத்துக்கு எழுந்தருளினர். பின்னர், பெரிய தங்க கொடி மரத்தின் முன்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கொடிபட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச வாத்தியம் இசைக்க, கோயில் பெரிய தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
கொடி மரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பால், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்டசிறப்பு அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைதொடர்ந்து சோடச உபச்சார மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழா வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையும், இரவும் வெவ்வேறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. திருவிழாவில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 23-ம் தேதியும், தங்க சப்பரத்தில் கங்காள நாதர் எழுந்தருளி வீதியுலா வரும் 27 -ம் தேதியும் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாகச் செய்து வருகிறது.