படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 
ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றம்!

சுப.ஜனநாயக செல்வம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நவ.25 முதல் டிச.4 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. அதனையொட்டி முதல் நாளான இன்று கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி உற்சவர் சந்நிதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு அலங்கரிக்கப்பட்ட தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ‘அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பினர். பின்னர் தீப, தூப ஆராதனை காட்டப்பட்டது. தினமும் காலை, மாலை என இரு வேளையும் சுவாமி புறப்பாடு நடைபெறும். காலையில் தங்க சப்பரம், மாலையில் தங்க மயில், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருள்வர்.

அதனைத் தொடர்ந்து எட்டாம் நாள் (டிச.2) முக்கிய விழாவான சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் இரவு 7.05 மணியளவில் நடைபெறும். டிச.3-ம் தேதி காலை 7.05 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்ட பின்பு மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து, இரவு 7.25 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை ஏற்றப்படும். பின்பு 8 மணியளவில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) ந.யக்ஞ நாராயணன் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT