பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் மே 30-ம் தேதி மாலை நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவின் 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 6-ம் நாளான மே 29-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மே 30-ம் தேதி தேரேற்றம், மாலை 4.30 மணிக்கு மேல்தேரோட்டம் நடைபெறுகிறது. ரத வீதிகளில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஜூன் 2-ம் தேதி காலை திருஊடல் நிகழ்ச்சியும், இரவில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. வைகாசி விசாக விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் தண்டாயுதபாணி சுவாமி, விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, சின்னக்குமாரர், துவாரபாலகர்கள், மயிலுக்கு காப்புகள் கட்டப்பட்டன.