திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி இலவச திருமண திட்டம் தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்கும் மணமக்களுக்கு புரோகிதர் பங்கேற்று அவரவர் மரபுப்படி திருமணத்தை இலவசமாக செய்து வைக்கிறார். இதற்கான மங்கள வாத்திய கலைஞர்களும் இலவசமாக பங்கேற்கிறார்கள்.
தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள ‘கல்யாண வேதிகா’ எனும் இடத்தில் இந்த இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. திருமணத்தின் போது மஞ்சள், குங்குமம், கங்கனங்கள் வழங்கப்படுகிறது. திருமணத்திற்கு தேவையான மாலை, கூறை புடவை, வேட்டி போன்றவை மட்டும் திருமண வீட்டார் கொண்டு வந்தால் போதுமானது. மிகவும் எளிமையான முறையில் இந்த திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
திருமணம் முடிந்த கையோடு, ரூ. 300 சிறப்பு தரிசனம் வாயிலாக (இதுவும் இலவசமாக) புதுமண தம்பதியினர் மற்றும் இவர்களின் பெற்றோர் என மொத்தம் 6 பேருக்கு சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பையும் திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுக்கிறது. அதன் பின்னர் அனைவருக்கும் லட்டு பிரசாதமும் இலவசமாக வழங்கப்படுகிறது.
2016-ல் தொடங்கி கடந்த 2025 டிசம்பர் மாதம் இறுதி வரை மொத்தம் 26,777 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. கண்டிப்பாக இரு வீட்டாரும் இந்துக்களாக இருக்க வேண்டும். அதுவும் இது முதல் திருமணமாக மட்டுமே இருத்தல் அவசியம். மணமகளுக்கு வயது 18, மணமகனுக்கு வயது 21 நிரம்பி இருத்தலும் அவசியம்.
இந்த திருமணத்துக்கு தேவஸ்தானத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். திருமணம் முடிந்த பின்னர், இது சட்டப்படி பத்திரப்பதிவும் செய்யப்படுகிறது. ஏழுமலையான் குடிகொண்டிருக்கும் திருமலையில் ஏழை, பணக்காரர்கள் என்கிற பாகுபாடு இன்றி பலர் திருமணம் செய்து கொள்வதை ஒரு பாக்கியமாகவே கருதுகின்றனர்.