திருமலை: சொர்க்க வாசல் தரிசனத்திற்காக டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு நேற்று முதல் வரும் 8-ம் தேதி வரை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளதை தொடர்ந்து, திருமலைக்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்து இருந்தது.
ஆனால், முதல் 3 நாட்கள், அதாவது டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி ஆகிய 3 நாட்களும் ஏற்கெனவே ஆன்லைன் மூலம் குலுக்கல் முறையில் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு விட்டன. ஆதலால், மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்தது.
இந்நிலையில், நேற்று 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை டிக்கெட்டுகள் இல்லாவிட்டாலும் சுவாமியை பக்தர்கள் தர்ம தரிசனம் வாயிலாக தரிசிக்கலாம் என தேவஸ்தானம் அறிவித்ததை தொடர்ந்து, 1-ம் தேதி மாலை முதலே திரளான பக்தர்கள் திருப்பதிக்கு குவிய தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் எவ்வித தரிசன டிக்கெட்டுகள் இல்லாவிட்டாலும் பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு சென்று, தர்ம தரிசன வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
இவ்வாறு தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு வரிசையில் உணவு, குடிநீர், சிறுவர்களுக்கு பால் என திருப்பதி தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும் 24 மணி நேரமும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 8 லட்சம் லட்டு பிரசாதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் பிஏசி சத்திரத்தில் அவர்கள் காத்திருக்கலாம். கூட்டம் குறைந்ததும் தரிசனத்திற்கு செல்லும் நேரத்தை அங்கு வந்து தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பார்கள்’’ என்றார்.