பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தீர்த்தக் காவடியுடன் குவிந்த பக்தர்கள்.
பழநி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நாளை மறுநாள் (மார்ச் 31) இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான ஏப்.1-ம் தேதி பங்குனி உத்திரத்தையொட்டி மாலை 4.30-க்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் காவடி எடுத்து வந்து பழநி தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, நேற்று ஏராளமான பக்தர்கள், தீர்த்தக் காவடி எடுத்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீர்த்தக் காவடியுடன் வரும் பக்தர்கள் மலைக்கோயிலில் ரூ.200 கட்டண தரிசன பாதை வழியாக இலவசமாகச் சென்று தரிசனம் செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, இதர பக்தர்களுக்கு தரிசன கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.