பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்.
பழநி: வார விடுமுறையையொட்டி பழநி முருகன் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வார விடுமுறையையொட்டி நேற்று அதிகாலை முதலே வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காவடி எடுத்தும், அலகு குத்தி வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கும் இடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும், ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து மலைக்கோயிலுக்குச் சென்றனர்.
முடி காணிக்கை மண்டபத்திலும் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். இரவில் தங்கரதத்தில் எழுந்தருளிய சின்னக்குமார சுவாமியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.