காரைக்கால்: தொடர் விடுமுறையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரசித்திப் பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை என்பதாலும், தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி, வார இறுதி தொடர் விடுமுறை என்பதாலும் இன்று(அக்.3) திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். சனிபகவானுக்கு நல்லெண்ணைய், மஞ்சள், பால், தயிர் ,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைக் காட்டப்பட்டது.
முன்னதாக பக்தர்கள் நளன் தீர்த்தத்தில் புனித நீராடி, கலிதீர்த்த விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து, 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசித்து, சனிபகவானுக்கு உகந்த எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் பழனிவேல் மற்றும் திருநள்ளாறு காவல் ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையில் திருநள்ளாறு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.