ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளக் கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்
திருவள்ளூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை தினத்தில், பொதுமக்கள் புண்ணிய தலங்களில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அவ்வகையில், இன்று ஆடி அமாவாசை என்பதால், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். புனித நீராடிய அவர்கள், அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
அதுமட்டுமல்லாமல், அதிகாலை 5 மணி முதல் வீரராகவபெருமாள் கோயிலில் திரளான பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசைகளில் நின்று, 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து, வீரராகவபெருமாளை வணங்கி வருகின்றனர். மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவே, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் திருவள்ளூரில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.