திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
தூத்துக்குடி: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிறு விடுமுறை மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனால், பொது தரிசனம், நூறு ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு தரிசன பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.