நவராத்திரி விழாவுக்காக யானைமீது சரஸ்வதி தேவி, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் விக்ரகங்கள் திருவனந்தபுரம் புறப்பட்டன.
நாகர்கோவில்: திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் கொண்டாடப்பட்டு வந்த நவராத்திரி விழா, 1840-ம் ஆண்டு முதல் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் முருகன், தேவாரக் கட்டுசரஸ்வதி தேவி ஆகிய 3 சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பத்மநாப சுவாமி கோயிலில் நவராத்திரி பூஜைக்கு வைக்கப்படும்.
பத்மநாபசுவாமி கோயிலில் இந்த ஆண்டு நவராத்திரி விழா நாளை (அக்.11) தொடங்குகிறது. இதை முன்னிட்டு, மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் நேற்று காலை நடைபெற்றது.
மன்னரின் உடைவாளை அரண்மனை அலுவலர் சாது, கேரளமாநில சுகாதாரம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் முரளீதரனிடம் வழங்கினார். அதை, தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜான்சிராணியிடம் அவர் ஒப்படைத்தார்.
தொடர்ந்து மன்னரின் உடைவாளை ஏந்தியவாறு அரண்மனை ஊழியர் முன்செல்ல, சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டன. அப்போது, மன்னர்கால முறைப்படி தமிழக, கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். சுவாமி சிலைகள் ஊர்வலம் நேற்று இரவு குழித்துறை சிவன் கோயிலை அடைந்தது. அங்கிருந்து இன்று காலை ஊர்வலம் புறப்படுகிறது.
மாநில எல்லையான களியக்காவிளையில் சுவாமி விக்ரகங்களுக்கு கேரள அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். இன்று இரவு 3 சுவாமி விக்ரகங்களும் நெய்யாற்றின் கரை கிருஷ்ணன் கோயிலில் வைக்கப்படும்.