குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. (அடுத்த படம்) காப்புக் கட்டி விரதம் தொடங்குவதற்காக கோயிலில் குவிந்த பக்தர்கள்.
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக இங்கு நடக்கும் தசரா திருவிழா, உலகப் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா, குலசேகரன்பட்டின்த்தில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதியுலாவாக கொண்டு வரப்பட்டு, காலை 5 மணி அளவில் கோயில் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள் ‘தாயே முத்தாரம்மா’, ‘ஓம் காளி, ஜெய் காளி’ என விண்ணதிர முழக்கமிட்டனர். தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு அணிந்தனர். விழா நாட்களில் இவர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள். இரவு 10 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் பவனி வந்தார்.
விழா நாட்களில் தினமும் இரவு அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளி மகிஷா சூரனை வதம் செய்வார். இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.