சதுரகிரி மலைப்பாதையில் 2024-ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவின் போது காணப்பட்ட கூட்ட நெரிசல். (கோப்பு படம்)
வில்லிபுத்தூர்: சதுரகிரியில் தினசரி மலையேற அனுமதி வழங்கிய உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மீண்டும் கூட்ட நெரிசல் அதிகரிப்பதால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் 3,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், சுந்தரமூர்த்தி, 18 சித்தர்கள், கோரக்கர் குகை ஆகியவை உள்ளன. சதுரகிரிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் தாங்கள் விரும்பிய நேரங்களில் சதுரகிரி மலையேறிச் சென்று இரவில் தங்கி வழிபாடு நடத்தி வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு சதுரகிரி மலையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பக்தர்கள் சிலர் உயிரிழந்ததை அடுத்து, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் மட்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்னர், நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இரவில் தங்கவும், விலங்குகளை பலியிடவும் தடை விதிக்கப்பட்டது.
நவராத்திரி விழாவுக்கு கூடுதல் நாட்கள் தரிசனம் செய்யவும், இரவில் தங்கி வழிபாடு நடத்தவும் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, பக்தர்கள் மீண்டும் தினசரி சதுரகிரி மலையேறி சென்று வழிபாடு நடத்த அனுமதித்து உத்தரவிட்டது.
2025 ஏப்ரல் முதல் பக்தர்கள் தினசரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தினசரி வழிபாட்டுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
அதன்படி ஜூன் 22 முதல் பக்தர்கள் தினசரி சதுரகிரி மலையேற தடை விதிக்கப்பட்டு, அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என மாதத்தில் 8 நாட்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டது.
தினசரி மலையேற அனுமதி வழங்கப்பட்டபோது, அனைத்து நாட்களிலும் செல்லலாம் என்பதால் பக்தர்கள் வருகை பரவலாகி, அமா
வாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் மிதமான கூட்டமே இருந்து வந்தது. தற்போது மாதம் 8 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதால் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து சதுரகிரி அனுமதி தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்காக வாதிட்டு, தினசரி மலையேற அனுமதி பெற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சதுரகிரி மலையேற கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை, சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட முக்கிய நாட்களில் கடும் கூட்ட நெரிசல் நிலவி வருகிறது.
2024-ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவில் மலைப்பாதையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, உணவு இல்லாமல் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையிலேயே காத்திருந்தனர். 2025-ல் தினசரி அனுமதி வழங்கப்பட்டதால் ஆடி அமாவாசைக்கு கூட்ட நெரிசல் ஏற்படவில்லை.
தினசரி அனுமதி வழங்கப்பட்டபோது அமாவாசை, பவுர்ணமி நாட்களில் 2 ஆயிரம் பக்தர்கள் என்ற அளவிலேயே சென்று வந்தனர். தற்போது தினசரி அனும திக்கு தடை விதிக்கப்பட்ட பின் 5 ஆயிரம் பேருக்கு மேல் மலையேறிச் செல்வதால் மலைப்பாதையில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
சதுரகிரி அனுமதி தொடர்பான வழக்கு இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை வாதிட்டு தினசரி மலையேற அனுமதி வழங்குவதன் அவசியத்தை நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும், என்றனர்.