மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு செப்.17-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி இன்று கோயிலில் சித்தி விநாயகர் சன்னதியில் பூர்வாங்க பூஜைகள் காலை 6.30 மணியளவில் மங்கல இசையுடன் தொடங்கின.
காலை 7 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன், புனித நீர் தெளித்தல், கஜ பூஜை, கோ பூஜை, தன பூஜைகள் நடைபெற்றன. இதில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் செல்லையா, சீனிவாசன், சுப்புலெட்சுமி, மீனா, இணை ஆணையர் க.செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.
மாலையில் விநாயகர் யாக வேள்வி, இறை அனுமதி பெறுதல் , திருமுறை விண்ணப்பம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளை மங்கல இசையுடன் நவக்கிரக ஹோமம், திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து செப்.11-ம் தேதி காலையில் சூரியனிடமிருந்து யாகத்திற்கு அக்னி எடுத்தல் நடைபெறும். அன்று மாலையில் முதல்கால யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. அதனைத்தொடர்ந்து காலை, மாலையில் மங்கல இசை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனை நடைபெறும்.
செப்.16-ம் தேதி பத்தாம் கால யாகசாலை பூஜைகள் முடிந்தபின்பு அன்று காலை 5 மணிமுதல் 6 மணி வரை பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு விழா நடைபெறும். அன்று மாலையில் 11-ம்கால யாகசாலை பூஜை நடைபெறும். அடுத்த நாள் செப்.17-ம் தேதி காலை 5.45 மணியளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
பின்பு காலை 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களில் புனித நீர் ஊற்றி சமகாலத்தில் குடமுழுக்கு விழா நடைபெறும். பின்பு 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மன் கோபுரத்திற்கு குடமுழுக்கும், 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரர் சுவாமி கோபுரத்திற்கு குடமுழுக்கு விழாவும் நடைபெறும். அன்று மாலை மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
இரவு 7 மணியளவில் பஞ்சமூர்த்திகள் மாசி வீதிகளில் எழுந்தருள்வர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர் க.செல்லத்துரை ஆகியோர் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.