சித்தூர்: தமிழக எல்லையில் ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே காணிப்பாக்கம் எனும் ஊரில் பிரசித்தி பெற்ற சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலுக்கு தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் வரை வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு, பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. இக்கோயிலில் அதிகாலை முதல் இரவு ஏகாந்த சேவை வரை பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை தரிசித்து விட்டு செல்வதால், பக்தர்களுக்கு வசதியாக சுவாமியை கருவறை அருகே சென்று தரிசிக்கும் முறையை கோயில் தேவஸ்தானம் அமல்படுத்தி உள்ளது. இதற்கு ஒருவருக்கு தலா ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணியில் இருந்து 11 மணி வரையிலும் மதியம் 3 மணியில் இருந்து 4 மணி வரையிலும் இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காணிப்பாக்கம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி பி.கிஷோர், முதல் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 438 பக்தர்கள் தலா ரூ.500 கட்டணம் செலுத்தி சுவாமியை வழிபட்டனர்.