ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோயிலில் சேவை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு என்பது விஷமத்தனமாக கருத்து: அறநிலையத் துறை

வெற்றி மயிலோன்

சென்னை: ‘அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர் சேர்க்கை என்ற சொல்லை சேவை என தவறாக சித்தரித்து "ஸ்ரீரங்கம் கோயிலில் சேவை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு" என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் விஷமத்தனமாக கருத்து பரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.' என இந்து சமய அறநிலையத் துறை விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு (வைணவம்-பாஞ்சராத்ர ஆகமம்) 2026-2027 ஆண்டுக்கான ஓராண்டு இளநிலை வைணவ அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சியில் சேர 14 வயது நிரம்பிய குழந்தைகளில் விரும்புபவர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கும்படி கடந்த 24.05.2026 அன்று தினத்தந்தி நாளிதழில் விளம்பரமும் இதுதொடர்பாக 06.06.2026 திருச்சி சூரியன் எப்.எம் வானொலியிலும், 08.06.2026 திருச்சி ஹலோ எப்.எம் வானொலியிலும், ஒலிபரப்பு விளம்பரமும் செய்யப்பட்டது.

மேற்படி அறிவிப்புகளில் விண்ணப்பம் அளிப்பதற்கு கடைசி நாள் 08.06.2026 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 10 விண்ணப்பங்கள் மட்டுமே வரபெற்றது. ஆதலால் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்துவதற்கு மேற்படி விண்ணப்பத்திற்கான கடைசி நாள் 30.06.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என 11.06.2026 அன்று அனைத்து நாளிதழிகளிலும் செய்தி வெளியிட கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேற்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில் இடம்பெற்றிருந்த சேர்க்கை என்ற சொல்லை சேவை என தவறாக சித்தரித்து "ஸ்ரீரங்கம் கோயிலில் சேவை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு" என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் தன்னிச்சையாக அறிவிப்பு ஒன்று தனிநபர்களால் பதிவிடப்பட்டு குழந்தைகளை சேவை செய்ய திருவரங்கம் திருக்கோயில் நிர்வாகம் அழைப்பதாக விஷமத்தனமாக கருத்து பரப்பப்பட்டுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். இது திருக்கோயிலுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும், அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக தவறாக வெளியிடப்பட்டுள்ள பொய் செய்தி என்ற விபரம் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT