கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 43 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி பேராலயம்.
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் நள்ளிரவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு விண்மீன் ஆலய வளாகத்தில் குடில் அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின் விளக்குகளால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
பேராலயத்தைச் சுற்றி அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பேராலயத்தின் முன்பு 43 அடி உயரத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் புனிதம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
நேற்று இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்மீன் ஆலயத்தில் நடந்தது. சிறப்பு திருப்பலியைத் தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் வான தேவதைகளால் பவனியாக எடுத்துவரப்பட்டு பேராலய அதிபரிடம் வழங்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்குத்தந்தை அற்புதராஜ், அருகில் உள்ள குடிலில் வைத்து இயேசு பிறந்ததாக அறிவித்தார்.
இந்நிலையில், பேராலய அதிபர் இருதயராஜ், பொருளாளர் உலகநாதன், நிர்வாகத் தந்தை பரிசுத்தராஜ், உதவி பங்குத் தந்தை ஆரோஜேசுராஜ் மற்றும் நிர்வாகத் தந்தையர்கள், அருள் சகோதரிகள், சகோதரர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று காலை வரை தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணி வந்திருந்தனர். விழாவையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.