சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் பிரமோற்சவ விழாவின் ஒரு பகுதியாக சேனைமுதன்மையார் புறப்பாடு நேற்று நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று சேனைமுதன்மையார் புறப்பாடு நடந்தது.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரம்மோற் சவ விழா இன்று (1-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவுக்கு முன்னோட்டமாக, நேற்றுமுன்தினம் இரவு புஷ்பப் பல்லக்கு சேவை நடைபெற்றது. பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தபோது, திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று விழாவுக்கான அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, பிரம்மோற்சவ விழா எவ்வித இடையூறுமின்றி செம்மையாக நடைபெற வேண்டி, சேனாதிகாரியான விஷ்வக்சேனர் நேற்று மாட வீதிகளில் உலா வந்து முன்னேற்பாடுகளைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை கொடியேற்ற நிகழ்வுடன் விழா முறைப்படி தொடங்குகிறது. இன்றிலிருந்து 10 நாட்களுக்கு, தினமும் காலை, இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 7-ம் தேதியும், 8-ம் தேதி பல்லக்கில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் சுவாமி புறப்பாடும், 9-ம் தேதி இரவு கொடியிறக்க நிகழ்வும் நடைபெறும். 10-ம் தேதி இரவு 10 மணிக்கு சிறிய திருத்தேர் நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது.