சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தோரட்டம் இன்று (ஜன.2) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை தொடர்ந்து கடந்த 26-ம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதிஉலாவும், 27-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 28-ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 29-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 30ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 31-ம் தேதி தங்க கைலாச வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
நேற்றிரவு (ஜன.1) தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுக்குதிரையில் வீதி உலா நடைபெற்றது. இன்று (ஜன.2) வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.
மலர் மாலைகள் மற்றும் தங்க நகைகளால் ஸ்ரீநடராஜர், சிவகாமசுந்திரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் மேலதாளம் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதிட அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 வரை தனித்தனி தேர்தலில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து கீழவீதி நிலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ, சிவா முழக்கத்துடன் தேர்களின் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர்கள் முக்கிய வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி மேல வீதி, வடக்கு வீதிகளில் வீதியுலா சென்று இரவு கீழவீதி நிலையை அடையும். ஒவ்வொரு வீதியுலும் மண்டகப்படிதாரர்கள் சாமிகளுக்கு படையல் செய்வார்கள். தேர்கள் வீதியுலாவையொட்டி நான்கு வீதிகளிலும் பெண்கள் மாகோலமிட்டிருந்தனர். தேர்களுக்கு முன்னாள் சிவனடியார்கள் தேவராம், திருவாசகம் பாடியபடியும், வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓதியபடியும் சென்றனர்.
தேருக்கு முன்னாள் சிவபக்தர்கள் சிவ வாத்தியங்களுடன், சிவ தாண்டவமாடியபடி சென்றனர். மேலவீதியும், வடக்கு வீதியும் சந்திக்கும் பகுதியில் பருவதராஜ குருகுல மரபினர் ஸ்ரீநடராஜர், ஸ்ரீ சிவாகசுந்தரி அம்பாளுக்கு பட்டு சாற்றி படையல் செய்வர். இரவு தேர்கள் நிலையை அடையும். இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சாமிகளுக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
முக்கிய திருவிழாவான தரிசன விழாவையொட்டி நாளை (ஜன.3) சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
ஜன.4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜன.5-ம் தேதி திங்கள்கிழமை ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
தரிசன விழாவையொட்டி வெளிநாட்டு, வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்து வருகின்றனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் மற்றும 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.