சென்னை பெரம்பூர் எஸ்பிஆர் சிட்டி வளாகத்தில் 47.8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு.
சென்னை: சென்னை எஸ்.பி.ஆர். சிட்டியில் உலக சாதனை முயற்சியாக 47.8 அடி உயர கொலு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் எஸ்பிஆர் சிட்டி என்ற பெயரில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளாகம் உள்ளது. இங்கு 2026-ம் ஆண்டு நவராத்திரி உற்சவத்தின் ஒரு பகுதியாக 47.8 அடி உயர பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த ‘வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அமைப்புடன் இணைந்து, இந்த சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எஸ்பிஆர் சிட்டி வளாகத்தில் 47 தளங்களை கொண்ட குடியிருப்பு வளாகம் (டவர் எச்) உள்ளது.
இது சென்னை நகரின் மிக உயரமான குடியிருப்பு வளாகமாக குறிப்பிடப்படுகிறது. சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்த வளாகத்தையும், தமிழ்நாட்டில் மிகவும் விரும்பப்படும் பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி கொலு மரபையும் இணைக்கும் வகையில் கொலுவின் உயரம் (47.8 அடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலு வரும் 20-ம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு திறந்திருக்கும். இந்த 10 நாள் விழாவில் தினசரி பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தொடக்க விழாவில் எஸ்பிஆர் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் நவின் ரங்கா, வருவாய் பிரிவு துணைத் தலைவர் பிரகாஷ் மோகனசுந்தரம், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுக்கான முதுநிலை துணைத் தலைவர் பாலகுமார் சந்திர சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எஸ்பிஆர் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஹிதேஷ் கவாட் கூறுகையில், “இங்குள்ள 4,500-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களை எடுத்துரைக்கின்றன. சென்னையை சேர்ந்த அனைவரையும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைக்கிறோம்” என்றார்.