ஆன்மிகம்

தொடர் சாரல் மழை: ஐப்பசி பவுர்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாட்டுக்கு பக்தர்கள் சதுரகிரி மலையேற தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 2015- ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மலை பெய்தாலே பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும்.

இந்நிலையில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக அக்டோபர் 23 முதல் 26-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள தாணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை ஓடை ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி அக்டோபர் 23, 24 ஆகிய இரு நாட்களும் பிரதோஷம் மற்றும் சிவராத்திரி வழிபாட்டுக்கு பக்தர்கள் சதுரகிரி மலையேற தடை விதிக்கப்பட்டது. இன்று (அக்டோபர் 25) ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாடு நடைபெற உள்ள நிலையில், மலையில் தொடர் சாரல் மழை மற்றும் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதன் காரணமாக பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT