நாகூர் தர்காவில் நேற்று நடைபெற்ற பக்ரீத் திருநாள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த இஸ்லாமியர்்கள்.
நாகப்பட்டினம்: பக்ரீத் பண்டிகையையொட்டி, பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் நேற்று திரளான முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இறை தூதரான நபிகளாரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் உள்ள நவாப் பள்ளியில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் விதமாக நேற்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர்.
தொழுகைக்கு பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல, நாகூர் தர்காவை சுற்றியுள்ள காதிரியா மதரஸா, திவானஷா பள்ளித் தெரு பள்ளிவாசல், செய்யது பள்ளிவாசல், ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித், பாத்திமா பள்ளிவாசல், தோழை சாஹிப் தைக்கால் ஆகிய பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
மேலும், நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பு: பக்ரீத் பண்டிகையை யொட்டி தமிழகம் முழுவதும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சமபங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கும் பயன்படுத்தி இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.