ஆன்மிகம்

சபரிமலையில் தொடர் கலை நிகழ்ச்சி: களரி குறித்து செயல் முறை விளக்கம் அளித்த வீரர்கள்!

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை சந்நிதான கலையரங்கில் களரி எனும் தற்காப்பு கலை, நடனம், இசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை ஐயப்ப பக்தர்கள் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர்.

சபரிமலை சந்நிதானம் பெரிய நடைப்பந்தல் அருகே சாஸ்தா கலையரங்கம் உள்ளது. இங்கு மண்டல, மகர காலங்களில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும், பாதுகாப்பு பணியில் பங்கேற்கும் போலீஸ் குழுவுக்கு இங்கு பயிற்சியும், அவ்வப்போது அதிகாரிகளின் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறும்.

மண்டல காலம் தொடங்கியதில் இருந்து இங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. போலீஸ் இசைக்குழு சார்பில் ஐயப்பன் குறித்த பாட்டு கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து போலீஸார் ஒருவர் புல்லாங்குழல் வாசித்தார். அடுத்தடுத்த நாட்களில் பழங்குடியினரின் பாரம்பரிய நடனம், பழங்கதைகளைக் கூறும் கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கலையரங்கில் கேரளாவின் பாரம்பரிய தற்காப்பு கலையான களரி நிகழ்ச்சி இடம்பெற்றது. சிவசக்தி களரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குருநாதர் மஜீந்திரன் தலைமை வகித்தார். ஏழு மாணவர்கள் கலந்து கொண்டு வாள்வீச்சு, ஆயுதமின்றி சண்டையிடுதல் உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

குறைந்த வயதுடைய வேதிக் (7), நவீன் கிருஷ்ணா, சரத் லால், பிரகாஷ், ரஞ்சித், நித்தின், ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். வாள் மற்றும் கேடயத்துடன் தரையில் இருந்து மேலேழுப்பிய நிலையில் சண்டையிட்டு களரியின் பல்வேறு நிலைகள் குறித்து விளக்கினர்.

இது குறித்து குருநாதர் மஜீந்திரன் கூறுகையில், “களரி கலையானது தொடர் தாக்குதல், லாவகமாக விலகுதல், உதைத்தல், தூக்கி வீசுதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளைக் கொண்டது. மருத்துவம், மூலிகைகள் குறித்த நுணுக்கங்களும் களரியில் கற்பிப்பது உண்டு. சுருள்வாள், மான்கொம்பு, கோடாலி உள்ளிட்ட பல ஆயுதங்களை இதில் பயன்படுத்துவோம்” என்றார்.

இதேபோல் 67 வயதுடைய திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லதாவிஸ்நாத் என்பவரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இவர் சிவன் வேடமிட்டு நடனமாடினார். தொடர் கலை நிகழ்ச்சிகளை ஐயப்ப பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT