திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்துக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 3 மணிக்கு வெள்ளிப் பல்லக்கில் கொடிப்பட்டம் 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடிமரத்தில் பஞ்சவாத்தியங்கள் முழங்க, அதிகாலை 5.20 மணிக்கு சிவாச்சாரியார் கொடி ஏற்றினார். அப்போது ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று பக்தர்கள் முழங்கினர். தொடர்ந்து, கொடி மரத்துக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. 6.35 மணிக்கு கொடி மரத்துக்கு மகா தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள் உள்பட திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4.30 மணிக்கு அப்பர்சுவாமிகள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்து கோயில் சேர்ந்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீபலி நாயகர் அஸ்திரதேவருடன் தந்த பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பாடாகி வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தார். ஆவணித் திருவிழா செப்.11-ம் தேதி வரை நடைபெறுகிறது. 9-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.