சபரிமலையில் அன்னதான உணவுப் பட்டியல் மேம்படுத்தப்பட்ட நிலையில் மதிய உணவை பரிமாற தயாரான ஊழியர்கள்.

 
ஆன்மிகம்

சபரிமலையில் அன்னதான உணவு பட்டியல் மாற்றம்: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

என்.கணேஷ்ராஜ்

தேனி: சபரிமலையில் அன்னதான உணவு பட்டியல் விருந்து போல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மண்டல காலத்தின் முதல் நாளிலேயே ஏற்பட்ட இந்த மாற்றம் பக்தர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வழிபாட்டு காலங்களில் அன்னதானம் வழங்கப்படும். இதற்காக மாளிகைப்புரத்தம்மன் கோயில் அருகே அன்னதான மண்டபத்தில் உணவு வழங்கப்படும். குறிப்பாக மண்டல, மகர விளக்கு காலங்களில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். கடந்த ஆண்டு வரை காலையில் உப்புமா, கொண்டக் கடலை குழம்பு, மதியம் புலாவ், இரவில் கஞ்சி, ஊறுகாய் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு மாநில பக்தர்களும் வெவ்வேறு உணவு பழக்கத்தைக் கொண்டிருப் பதால் அன்னதானத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாத நிலை இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் அன்னதானம், விருந்துபோல மாற்றி அமைக்கப் படும் என்று தேவசம்போர்டு தெரிவித்திருந்தது. முதல்நாளில் வெள்ளை அரிசி சாதம், நெய், சாம்பார், அப்பளம், ஊறுகாய், பாயாசம் வழங்கப்பட்டது.

ஆனால் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த நடைமுறைச் சிக்கலால் சில நாட்களில் பழைய உணவுப் பட்டியலே தொடர்ந்தது. இந்நிலையில் மண்டல காலத்தின் முதல் நாளான நேற்று இந்த உணவுப் பட்டியல் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி காலை 6.30 மணி முதல் 11 மணி வரை இட்லி, தோசை, சம்பா கோதுமை உப்புமா, சுக்குக்காபி, இனிப்பு, கொண்டைக்கடலை கூட்டு இவை அனைத்தும் தினமும் சுழற்சி முறையில் மாறி மாறி அளிக்கப்படும்.

மதிய உணவாக பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெள்ளை அரிசி சாதம், பருப்பு, அப்பளம்,நெய், சாம்பார், ரசம், அவியல், மூலிகை குடிநீர், மாங்காய், பாயாசமும் மாலை 6.30 முதல் இரவு 11 மணி வரை குத்தரிசி கஞ்சி, காராமணி கூட்டு, சப்பாத்தி, பச்சை பட்டாணி குழம்பு உள்ளிட்டவை சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப இவற்றை கூடுதலாகவும் பெற்றுக் கொள்ளலாம். அன்னதான மண்டபத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் உண்பதற்கான வசதி உள்ளது.

முதல் நாள் அன்னதான நிகழ்ச்சியை தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். திருவிழா காலம் முழுவதும் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இத்துடன் சமையலறை, உணவுக் கூடம், உண்ணும் இடம், நடைபாதை உள்ளிட்ட பல இடங்களில் 12 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இவற்றை தேவசம்போர்டு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அன்னதான உணவுப் பட்டியலில் ஏற்பட்ட இந்த மாற்றம் ஐயப்ப பக்தர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT