ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று இரவு ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 15 ஆயிரம் பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரெங்கம் ரெங்கமன்னாரை திருமணம் புரிந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், கருடாழ்வார் சமேதராக ரெங்கமன்னார் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் உள்ள மணப்பந்தலில் மாலை 4.30 மணிக்கு ரெங்கமன்னார், பெரியாழ்வார் பூர்ண கும்பத்துடன் எழுந்தருளினர். மாலை 5 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பாடாகி மணப்பந்தலில் எழுந்தருளினார். தொடர்ந்து பெரியாழ்வார் ஆண்டாளை ரெங்கமன்னாருக்கு கன்னிகா தானம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.
இதில் பெரியாழ்வாரின் 225-வது வம்சாவழியான வேதபிரான் பட்டர் சுதர்சனன் ஆண்டாளை ரெங்கமன்னாருக்கு கன்னிகா தானம் செய்து வைத்தார். தொடர்ந்து திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள் சீதனமாக அனுப்பிய பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு, இரவு 7 மணிக்கு மேல் திவ்ய தம்பதிகள் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற்றது.
அப்போது பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனர். பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர், செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.