திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. வரும் செப்டம்பர். 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழாவும், நவராத்திரி பிரம்மோற்சவ விழா அக்டோபர் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தொடங்கி உள்ள நிலையில், செப்டம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு கோயிலில் நடைபெறும் அஷ்டதள பாதபத்மாராதனை சேவை, திருப்பாவாடை சேவை, ஆர்ஜித கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை போன்றவையும், மூத்த குடி மக்களுக்கான சிறப்பு தரிசனம், மாற்றுத் திறனாளி பக்தர்கள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், நன்கொடை யாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது.
தேவஸ்தானம் அறிவிப்பு
இந்த 9 நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரடியாக வரும் விஐபி பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.