ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார்.
ஸ்ரீ வில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தாயார் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவுக்காக மே 28-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கின.
நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் கருட கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
ஆகஸ்ட் 10-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவையும், 12-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 14-ம் தேதி ஆடிப்பூரம் அன்று காலை 9.05 மணிக்கு முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.