ஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆகஸ்ட் 14-ல் ஆடிப்பூர தேரோட்டம்

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகஸ்ட் 14-ம் தேதி காலை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தாயார் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவிற்காக மே 28-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியது.

ஆகஸ்ட் 4-ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை தேரோட்ட திருவிழாவுக்கு தேங்காய் தொட்டு நியமனம் பெரும் உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் கருட கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூர திருவிழா தொடங்கியதை முன்னிட்டு, முதல் நாளான இன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் 16 வண்டி சப்பரத்தில் 4 ரத வீதிகளில் உலா வருகின்றனர். ஆகஸ்ட் 10-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவையும், ஆகஸ்ட் 12-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி ஆடிப்பூரம் அன்று காலை 9:05 மணிக்கு முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT