ஆன்மிகம்

மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் மூலவராக வன பத்ரகாளியம்மன் உள்ளார். இங்குள்ள அம்மன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்தில் மூலவர் லிங்க வடிவிலும், அன்னை பத்ரகாளியம்மன் நின்ற வடிவத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தல விருட்சமாக தொரத்தி மரம் உள்ளது.

சாகா வரம் பெற்ற மகிஷாசுரனை அழிக்க அம்பாள் சிவபெருமானை நினைத்து பூஜை செய்து வழிபட்டார். இக்கோயிலின் முன்பு பகாசூரன், பீமன் ஆகிய இரண்டு காவல் தெய்வங்கள் உள்ளனர்.

கிழக்கு நோக்கிய சந்நிதியில் முனியப்பன் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் மேற்கில் ஓடும் பவானி ஆற்றில் குளித்துவிட்டு, கரையோரமாக எழுந்தருளியுள்ள முத்தமிழ் விநாயகரை வழிபட்டுஅம்மன் சந்நிதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

செய்வினை அகல, பில்லி சூனியம் நீ்ங்க, பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்கின்றனர். அம்மனிடம் குழந்தை வரம் கேட்டு பிரார்த்திப்போரும் உண்டு. புதியதாக தொழில் தொடங்குவோர், திருமண பேச்சுவார்த்தை தொடங்குவோர் பத்ரகாளியின் முன் பூப்போட்டு கேட்பது வழக்கம்.

சிவப்பு, வெள்ளை பூக்களை பொட்டலமிட்டு, அம்மன் காலடியிலிட்டு, எந்தப் பூவை நினைக்கிறோமோ அந்த பூ வந்து விட்டால் அம்மன் உத்தரவு தந்து விட்டார் என்று நல்ல காரியங்களைத் தொடங்குகின்றனர். அதேபோல், இந்த அம்மனுக்கு உகந்த பலியிடுதலாக கிடா வெட்டும் இக்கோயிலில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT