திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் மக்கள்

 
ஆன்மிகம்

ஆடி அமாவாசை: புதுச்சேரி கடற்கரை, திருக்காஞ்சியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஆடி அமாவாசையொட்டி புதுச்சேரி கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அத்துடன் தீர்த்தவாரியில் பக்தர்கள் தரிசனத்தை மேற்கொண்டனர்.

புதுவை வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளிலும் ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. கங்கை நதிக்கரையில் காசி இருப்பதை போல, சங்கராபரணி ஆற்றங்கரையில் திருக்காஞ்சி அமைந்துள்ளதால் ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் கோயில் காசிக்கு நிகரான பித்ரு வழிபாட்டுத் தலமாக போற்றப்படுகிறது.

இன்றைய தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு கெங்கை வராக நதீஸ்வரர் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்களில் ஏராளமானோர் திரண்டனர். சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மக்கள் குவிந்தனர். சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

அதேநேரத்தில், ஆற்றில் புனித நீராடும் பகுதிகளில் சேறு அதிகமாக இருந்ததால் மக்கள் சிரமம் அடைந்தனர். பக்தர்களின் வசதிக்காக நீராடும் பகுதிகளை சீரமைத்து, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோயில் தரப்பில் பக்தர்கள் குளிக்க ஷவர் மாடலில் தண்ணீர் கொட்டும் வகையில் ஆற்றங்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேபோல் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை, காலாப்பட்டு கடற்கரை, குருசுக்குப்பம் கடற்கரை பகுதி, வேதபுரீஸ்வரர் கோயில் குளக்கரை, உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமானோர் நீர்நிலைகளில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

புதுச்சேரி கடற்கரையில் தீர்த்தவாரி - மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசையை முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டனர். அந்த வகையில் ஆடி அமாவாசை தினமான இன்று புதுச்சேரி கடற்கரை காந்தி சாலையில் பல்வேறு கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

புதுச்சேரி கடற்கரையில் தீர்த்தவாரியில் கடவுள்களை வணங்கும் பக்தர்கள்

தொடர்ந்து கடற்கரை காந்தி சிலை அருகே மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், கவுசிக பாலசுப்பிரமணியர், காமாட்சி அம்மன், தண்டு மாரியம்மன், முத்துமாரியம்மன், நாகமுத்துமாரியம்மன், சிவசுப்பிரமணியர், வரசித்தி விநாயகர் உள்பட பல்வேறு கோயில்களிலிருந்து கடற்கரைக்கு கொண்டு

வரப்பட்ட உற்சவ மூர்த்திகள் கடலில் நீராடினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள் நீண்ட வரிசையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT