பழநி: பழநி வைகாசி விசாகத் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று (ஜூன் 1) இரவு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் முத்துக்குமாரசுவாமி சமேத வள்ளி, தெய்வானை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.
விழாவின் 6-ம் நாளான நேற்று (ஜூன் 1) இரவு 7.15 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (ஜூன் 2) வைகாசி விசாக தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. முன்னதாக, காலை 9 மணிக்கு மேல் தேரேற்றம் நடக்க உள்ளது. ஜூன் 5-ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி, பழநியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.