மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில், குரு முதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.
தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆதீன குரு முதல்வர் குருஞான சம்பந்தர் குருபூஜை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம் நடைபெற்றது. நேற்று காலை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதான கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில், கோயிலில் உள்ள கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரிஷபக் கொடியேற்றப்பட்டது. இதில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முக்கிய நிகழ்வுகளாக 6-ம் தேதி திருக்கல்யாணம், 8-ம் தேதி தேரோட்டம், 9-ம் தேதி காலை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் ஆகியவை நடைபெறும். 10-ம் தேதி இரவு தருமபுரம் ஆதீனம் கயிலை ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவையொட்டி நாள் தோறும் சமய கருத்தரங்குகள், வழக்காடு மன்றம், ஆய்வரங்கம், சமய பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.