ஆன்மிகம்

பழநி முருகன் கோயிலில் ‘பிரேக் தரிசன’ திட்டம்: பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம் 

ஆ.நல்லசிவன்

பழநி: பழநி முருகன் கோயிலில் ‘இடைநிறுத்த தரிசன சேவை’ திட்டம் செயல்படுத்துவது குறித்து ஜூன் 16-ம் தேதி வரை பக்தர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதாபணி சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் பொது தரிசனம் மட்டுமின்றி, ரூ.10, ரூ.20, மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகளவில் பக்தர்கள் வரும் பிரதான கோயில்களில் ‘இடைநிறுத்த தரிசனம்’ (பிரேக் தரிசனம்) வசதி ஏற்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பழநி முருகன் கோயிலில் ‘இடைநிறுத்த தரிசன சேவை’ தொடங்குவது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் தேவஸ்தான அலுவலகத்தில் ஒட்டப்பட்டு உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, ”பழநி முருகன் கோயிலில் ‘இடைநிறுத்த தரிசன சேவை’ திட்டம் தொடங்கினால் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கிருத்திகை, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு உள்பட முக்கிய விசேஷ நாட்கள் என மொத்தம் 44 நாட்கள் செயல்படுத்தப்பட மாட்டாது. இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.

அவ்வாறு தரிசனம் செய்வோருக்கு கோயில் சார்பில் பஞ்சாமிர்தம் டப்பா, தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். மேலும் இந்த தரிசன சேவை குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துக்கள் இருந்தால் எழுத்து பூர்வமாக ஜூன் 16-ம் தேதிக்குள் கோயில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம். இல்லையெனில், இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT