விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் பிற மடங்களின் ஆதீனகர்த்தர்கள். படங்கள்: வீ.தமிழன்பன் 
ஆன்மிகம்

சீர்காழி சட்டைநாதர் கோயில் குடமுழுக்கு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரசித்திபெற்ற சட்டைநாதர் கோயில் குடமுழுக்கு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் கோயில் என்று அழைக்கப்படும் திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் மே 16-ம் தேதி தொடங்கியது. கோயிலின் மேற்கு கோபுர வாசல் அருகே 88 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, மே 20-ம் தேதி மாலை முதல் கால யாக பூஜை தொடங்கியது.

நேற்று காலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், திருநிலைநாயகி அம்பாள் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளின் சந்நிதி விமானங்களிலும் காலை 9.40 மணியளவில் ஒரே சமயத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அனைத்து விமானங்களின் மீதும் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

விழாவில், செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ல சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், இளைய குருமகா சந்நிதானம் ஸ்ரீ அஜபா நடேஸ்வர சுவாமிகள், துலாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய தேசிகர், திருப்பனந்தாள் காசி திருமட இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அதன்பின், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் ஆகியோர் கோயிலுக்கு வந்து அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்தனர். முன்னதாக ஆளுநரை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

SCROLL FOR NEXT