புத்தரின் யதார்த்தமான அணுகுமுறை நவீனமானது. அவர் வார்த்தை ஜாலத்தால் பெரும் தத்துவத்தையோ, சமய விளக்கத்தையோ தரவில்லை. அவர் பிறந்த சாக்கிய குலத்தைச் சேர்ந்த போர் வீரனைப் போல, சாதாரண மக்களிடம் யதார்த்த மாக வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
ஒரு முறை மாலுன்கியாவின் மகன் என்ற சீடர் ஒருவர் சிரஸ்வதி நகரில் புத்தரிடம் ஒரு கேள்வி கேட்டார்.
"இந்த உலகம் நிலையானதா, இல்லையா? இந்த உலகம் எல்லைகளுக்கு உட்பட்டதா, இல்லையா? வாழ்வு, உடல் சம்பந்தப்பட்டது மட்டும்தானா? புத்தர் சாவைக் கடந்தவரா...? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல், எதற்காகப் புத்தரின் சீடர்கள் அவர் வலியுறுத்தும் வழியைப் பின்பற்ற வேண்டும்?” என்று அவர் கேட்டார்.
எது முதன்மை?
இந்தக் கேள்விகளுக்கு நேரடி யாகப் பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்டு, நீதிக் கதை ஒன்றை கௌதம புத்தர் பதிலாக முன்வைத்தார்.
"மாலுன்கியாவின் மகனே, என் சீடரே. ஒரு முறை நச்சு தடவிய அம்பு ஒன்று ஒரு மனிதனின் உடலைத் துளைத்துவிட்டது. அவனது உறவினர் உடனடியாக மருத்துவரை நாடிச் சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட அந்த மனிதன், தன் உடலைத் துளைத்த அம்பை வெளியே எடுப்பதற்கு முன் தனக்குச் சில விஷயங்கள் முதலில் தெரிய வேண்டும் எனச் சொல்வதாக வைத்துக்கொள்வோம்.
"அம்பு எய்தவரின் பெயர் என்ன? அவனது சுற்றம் என்ன? அவன் பயன்படுத்திய வில், அந்த வில்லின் நாண், அம்பின் அமைப்பு, அம்பின் நுனியில் இருந்தது கன்றின் பற்களா அல்லது கத்தியின் கூர்தீட்டப்பட்ட நுனியா அல்லது கம்பி முடிச்சா என்பது போன்ற விஷயங்களை முதலில் தெரிந்துகொண்ட பின்னர்தான் மருத்துவர் தன்னைப் பரிசோதிக்கலாம்" என்று பாதிக்கப்பட்ட அந்த நபர் சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
அப்போது என்ன நடக்கும்? இந்த விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னரே, பாதிக்கப்பட்ட அந்த நபர் காலதாமதத்தால் இறந்து போகலாம். அது போலவே நன்கு வாழ்வதற்குத் தேவையான விஷயங்களைத் தவிர, மற்ற விஷயங்களில் நமக்குத் தெரிய வேண்டியது என்னவென்றால், இந்த வாழ்விலுள்ள கஷ்டங்களும் அவற்றைப் போக்கும் நெறி முறைகளும் மட்டுமே" என்றார் புத்தர்.
நல மருத்துவர்
நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவமனையுடன் புத்தர் தன்னை ஒப்பிட்டுக்கொள்வது வழக்கம். மனிதர்களது தவறுகளையும் கஷ்டங்களையும் அவர் நோய்களுடன் ஒப்பிட்டார். ராஜகிரஹா பூங்காவில்அணில் களுக்கு உணவூட்டும் இடத்தில் இருந்தபோதும் புத்தர் அப்படித் தான் கூறியிருக்கிறார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவன், புத்தரைச் சந்தித்துக் குணம் பெற வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டிருந்த போது, புத்தர் இப்படிக் கூறினார்: "நான் கூறும் போதனையை உணர்ந்து, அதைப் பின்பற்று வதே புத்திசாலித்தனம். வருந்தும் நோயாளி ஒருவர் தன் கஷ்டத் தைப் போக்கிக்கொள்வதற்கு என்னை நாட நினைப்பது நிச்சயம் புத்திசாலித்தனமல்ல" என்றார்.