கே
ரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் வட்டத்தில் உள்ளது ஸ்ரீகுறும்பா பகவதி கோயில். இந்தக் கோயிலை ‘லோகாம்பிகை கோயில்’ என்றும் அழைப்பார்கள். கேரளத்தின் முதல் காளி கோயில் இதுதான் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயில் கேரளாவில் உள்ள மற்ற அறுபத்தி நான்கு தேவி கோயில்களுக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. ‘கொடுங்கல்லூரம்மா’ என்ற பேரில் திராவிட தேவியாகிய பத்ரகாளி என்றும் ருத்ர மகா காளி என்றும் வழிபட்டுவருகின்றனர். கொடுங்கல்லூரைத் தலைநகரமாக்கிக் கேரளாவை ஆண்டுவந்த சேரன் செங்குட்டுவன், முதன்முறையாகக் கண்ணகி தேவிக்குச் சிலையமைத்துக் கோயில் கட்டி வைத்தார். சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலையின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் காலப்போக்கில் உண்டாகின.
செங்குட்டுவன் ஆண்டுவந்த காலத்தில் சமண மதம் கொடுங்கல்லூரில் பிரபலமாக இருந்தது. பத்தினிக் கடவுள் என்று கண்ணகியை வழிபட்டுவந்தனர். கண்ணகி சிலை வடிவமைப்பதற்கான கல் எண்ணிலடங்காத ராஜாக்களுடன் போர் செய்து இமயமலையில் இருந்து கொண்டுவரப்பட்டதாகச் சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்ணகி சிலையைப் பிரதிஷ்டை செய்தபோது இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மன்னர்கள் வந்து பங்குகொண்டனர். இலங்கையில் இருந்து கஜபாகு வந்திருந்ததாக வரலாறு கூறுகிறது. மஹாயம்மன் பாலி மொழியில் எழுதிய மகாவம்சத்தில் 2-ம் நூற்றாண்டில் கஜபாகு இலங்கையை ஆண்டுவந்ததாகக் கூறப்பட்டுள்ளதால் 1800 ஆண்டுகளுக்கு முன் கொடுங்கல்லூரில் கண்ணகி சிலை பிரதிஷ்ட்டை நடந்ததாக நம்பப்படுகிறது.
கண்ணகி பார்வதியாகவும் கலையாகவும் இங்கு உருவகப்படுத்தப்படுகிறார். பெண்களின் சக்தியாக காளியின் அவதாரம் கூறப்படுகிறது. பெரியம்மை என்ற மிக கொடிய நோயைத் தவிர்க்கக் கொடுங்கல்லூர் பத்ரகாளியால் மட்டும்தான் முடியுமென்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பெரியம்மை போட்டவர்களுக்கும், பெரியம்மை வராமல் தவிர்ப்பதற்கும், அம்மை வந்தவர்கள் குணமானபின் குளித்து தேவியின் அருள் பெறுவதற்காக இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். இங்கே பெரியம்மை குணமடைய ‘வசூரிமலை' எனும் ஒரு பிரதிஷ்டை உள்ளது. இதை வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாது.
கண்டாகர்ணன் எனும் பூதம் பெரியம்மையைக் காளியின் உடம்பிலிருந்து நக்கித் துடைப்பதற்காக வந்த அவதாரம். பூதத்துக்கு உதவி செய்வதற்காக வசூரிமலையை பரமசிவன் படைத்தார் என்று நம்பப்படுகிறது. பகவதி அம்மனிடம் மனமுருகி வேண்டினால் கண்டாகர்ணனையும் வசூரிமலையும் அனுப்பி, பெரியம்மையைக் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையும் இதன் அடிப்படையில் உருவானதே. இங்கே சிவன் ,கணபதி, ஷேத்ரபாலன், வசூரிமலை, தவிட்டுமுத்தி ஆகிய கடவுள்களும் உண்டு. ஆச்சாரங்களில் இந்தக் கோயில் மகா க்ஷேத்திரமாகத் திகழ்கிறது.
மகர மாதம் 1 முதல் 4 நாட்கள் கொண்டாடப்படும் தாலப்பொலி, மீனபரணி இரண்டும் கோயிலின் மிகப்பெரிய கொண்டாட்டங்கள். நவராத்திரி இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
படங்கள்: நதீரா