சென்னை: சென்னையில் ரூ.1.65 கோடியில் புனரமைக்கப்பட்ட கோதண்டராமர் கோயில் குளத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடம்பாக்கம் மண்டலம் 140-வது வார்டுக்கு உட்பட்ட மேற்கு மாம்பலத்தில், சுமார் 100 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்துக்கு வெளியே 350 அடி நீளம், 225 அடி அகலம் கொண்ட குளம் உள்ளது.
இந்தக் குளத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.65 கோடியில் புனரமைக்கும் பணியை, 2020-ல் சைதை தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். குளம் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தல், கரையின் சுற்றுப் பகுதியில் கருங்கல் பதித்தல், கைப் பிடிகளுடன் கூடிய நடைபாதை அமைத்தல், மரக்கன்றுகள், ஆயுர் வேத செடிகள் நடுதல்,சுற்றுச்சுவரில் ஓவியங்கள் வரைதல், கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புனரமைக்கப்பட்ட குளத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., துணை மேயர் மு.மகேஷ் குமார், எம்எல்ஏ-க்கள் தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், ஏஎம்வி.பிரபாகர ராஜா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.