கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா தேனி மாவட்ட வனப்பகுதியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தியபடி காட்சியளித்த கண்ணகியை தமிழக, கேரள பக்தர்கள் வழிபட்டனர்.
தேனி மாவட்ட தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையின் விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது.
மதுரையை எரித்துவிட்டு தலைவிரி கோலமாக வந்த கண்ணகிக்கு மங்கலநாண் பூட்டி கோவலன் அங்கிருந்து விண்ணுக்கு அழைத்துச் சென்றதாக நம்பிக்கை. இக்கோயிலுக்கு தமிழக பகுதி நடைபாதையான பளியன்குடி வழியே 6.6 கிமீ. ஏற்றமான மலைப்பகுதியில் செல்லலாம். கேரளப் பகுதியான தேக்கடி, கொக்கரக்கண்டம் வழியே 13 கிமீ. தூரம் ஜீப் மூலமும் செல்லலாம்.
இக்கோயில் திருவிழா ஒவ்வொரு சித்திரை மாத முழுநிலவு தினத்தில் நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பூசாரிகள் அடங்கிய வழிபாட்டுக் குழுவினர் அதிகாலை 4 மணிக்குச் சென்றனர்.
பின்பு உடைந்த கண்ணகி சிலைக்கு உரு கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார விதானம், திருப்பள்ளி எழுச்சி, கணபதி ஹோமம், ஆவாகனம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. பின்பு கண்ணகி பச்சை பட்டுஉடுத்தி தாமரைப்பூ அலங்காரத்தில், வளையல் அணிந்து கையில் சிலம்பு ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருமணம், குழந்தை வரம் வேண்டி பலரும் மண்சோறு உண்டனர்.
தமிழகம், கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டனர். மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயிலுக்கான பிரதான பாதை கேரள வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால் வழக்கம்போல இந்த ஆண்டும் கேரள அதிகாரிகளால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தன. ஆங்காங்கே 4 கட்டங்களாக பக்தர்கள் சோதனையிடப்பட்டனர். பிற்பகல் 2.30 மணி வரையே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து பக்தர்கள் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள பளியன்குடி மலைப்பாதையைச் சீரமைத்து வாகனங்களை இயக்கவேண்டும். இதன் மூலம் ஒவ்வொருமாத பவுர்ணமிக்கும் வழிபாடுகளை நடத்த முடியும். சிதைந்த கோயிலையும் புதுப்பிக்க வேண்டும்” என்றனர்.
தேக்கடி பாதையில் பக்தர்கள் நடந்து வந்தபோது பள்ளத்தாக்குப் பகுதியில் குட்டி யானை ஒன்று சுற்றித் திரிந்தது. இதை ஏராளமான பக்தர்கள் பார்த்து ரசித்தனர். இதேபோல் காட்டு மாடுகளும் இப்பகுதியில் உலா வந்தன.