திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலம் சென்ற லட்சக்கணக்கான பக்தர்கள்.படம்: சி. வெங்கடாஜலபதி 
ஆன்மிகம்

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் 15 லட்சம் பேர் கிரிவலம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணி விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், அம்மன் சன்னதி எதிரே உள்ள சித்திரகுப்தன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் சித்திரகுப்தனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர்.

சித்ரா பவுர்ணமியன்று 'மலையே மகேசன்' என போற்றப்படும் 14 கி.மீ. தொலைவுள்ள அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். பக்தர்களின் கிரிவலம் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இடைவிடாமல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய சென்றது. 'ஓம் நமசிவாய' எனும் மந்திரத்தை உச்சரித்தபடி பக்தர்கள் சென்றனர்.

ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலை மற்றும் அஷ்டலிங்கங்கள் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை சுமார் 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றதாக காவல்துறை கணித்துள்ளது. மேலும், இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் பக்தர்களின் கிரிவலம் தொடரும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT