மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (மே 3) அழகர்மலையிலிருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரைக்கு புறப்பட்டார். மதுரை மாநகர எல்லையில் நாளை (மே 4) மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கவும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடிக்கொள்ளவும் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டு வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அதனைமுன்னிட்டு கள்ளழகர் கோயில் திருவிழா மே 1ம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று மாலையில் திருவீதி உலா முடிந்து சுந்தரரராஜ பெருமாள் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.
18ம்படி கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பின்னர் பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி,சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் என வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறார். நாளை (மே 4) காலை 6 மணியளவில் மாநகர எல்லை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். பின்னர் புதூர், ரிசர்வ்லைன் வழியாக தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்தடைகிறார்.
அன்றிரவு 12 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் தங்கி திருமஞ்சனமாகிறார். பின்னர் சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றி வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருள்கிறார்.
அதனைத்தொடர்ந்து மே 5-ல் அதிகாலை 3 மணியளவில் கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்கிறார். அதனைத்தொடர்ந்து அதிகாலை 5.45 மணிக்குமேல் 6.12 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடைபெறும். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறார்.
மே 6ல் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மே 8-ல் மதுரையிலிருந்து கள்ளழகர் அழகர்மலைக்கு திரும்புகிறார். மே 9-ல் கோயிலை சென்றடைகிறார். மே 10-ல் உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவுறுகிறது.