திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர், தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று அம்மன் காலையில் நந்தவன திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்து காத்திருந்தார். பின்னர், சுவாமி சீர்வரிசைபொருட்களுடன் திருக்குளத்துக்குச் சென்று, அம்மனுக்கு கொடுத்து அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, மலைக்கோட்டை உள்வீதியில் சுவாமி, அம்மன் வீதியுலா வந்தனர். பின்னர், கோயிலில் மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.
காலை 11 மணியளவில் கடக லக்னத்தில் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் திருநாண் பூட்டுதல் எனும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதில், சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாலிச்சரடு ஆகியவை வழங்கப்பட்டன.