தஞ்சாவூர் பெரிய கோயில் தேருக்கு அலங்காரம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்த பணியாளர்கள். 
ஆன்மிகம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நாளை சித்திரை பெருவிழா தேரோட்டம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நாளை (மே 1) காலை நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இதன்படி, நிகழாண்டு இந்த விழா ஏப்.17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் வீதியுலா நான்கு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (மே 1) காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மேல வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேருக்கு, ஏப்.24-ம் தேதி தேரோட்டத்துக்கான முகூர்த்தகால் நடப்பட்டு, அன்று முதல் தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை தேரோட்டம் தொடங்குவதற்கு முன்னதாக தியாகராஜ சுவாமியும், அம்மனும் தேரில் எழுந்தருளியவுடன், சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்பின் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்க உள்ளனர்.

மேல வீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கனேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் ராணி வாய்க்கால் சந்து, ரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை மாரியம்மன் கோயில்,விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில்,

வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், மானோஜியப்பா வீதி விநாயகர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் தேர் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகியன இணைந்து செய்து வருகின்றன.

SCROLL FOR NEXT