மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மே 3-ல் நடைபெறும் தேரோட்டத்துக்காக தேர்கள் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் ஏப்.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் எட்டாம் நாள் திருவிழாவாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30ல் நடைபெறும். அடுத்த நாள் மே 1-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான மே 2-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். மே 3-ல் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
இதில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் தனித்தனி தேரில் எழுந்தருள்வர். அதனை முன்னிட்டு கீழமாசி வீதியில் தேரடி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு பெரிய தேர்கள் அலங்கரிக்கும் பணிகள் சில வாரத்திற்கு முன்பு தொடங்கியது. அப்பணிகள் முடிந்து தற்போது தயார் நிலையில் உள்ளன. மே 4-ம் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. அதற்கு அடுத்த நாள் மே 5-ல் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.