மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் முன்னேற்பாடு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ல் தொடங்கி மே 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணம், தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்களும் திரண்டு தரிசனம் செய்வது வழக்கம்.
இதில் கடந்தாண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். தற்போது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் பி.மூர்த்தி, சு.வெங்டேசன் எம்பி, எம்எல்ஏக்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், ஆட்சியர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், மேயர் இந்திராணி ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அலங்கார வேலைகள் நடைபெறும் தேர்களையும் ஆய்வு செய்தார். அதற்குப் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.