கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரத்தில் புகழ்பெற்ற துர்க்கையம்மன் கோயிலான ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.87 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் வடிவமைக்கும் திருப்பணி தொடங்கப்பட்டது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா 10 நாள் உற்சவமாக விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும். ஆனால், அந்த உற்சவத்தின் போது தேர் இல்லாததால் கட்டுத்தேரைக் கொண்டு விழாக்களை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, புதிய தேர் வடிவமைக்கப் பக்தர்கள் வலியுறுத்தியதின் பேரில், கோயில் நிர்வாகம் ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கி, புதிய தேர் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய தேர் வடிவமைப்பதற்கான திருப்பணி தொடங்கியது.
மாநிலங்களவை எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம் பங்கேற்று திருப்பணியை தொடங்கி வைத்தார். இதில் கோயில் செயல் அலுவலர் ம.ஆறுமுகம், ஆய்வாளர் சுதாராமமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் வெற்றிசெல்விரகு, ஸ்தபதி செம்பனார்கோயில் எஸ்.முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இது இது குறித்து கோயில் செயல் அலுவலர் ம.ஆறுமுகம் கூறியது, ''இக்கோயிலுக்கு இலுப்பை மரத்தினால் வடிவமைக்கப்படும் புதிய தேர், திருக்கோயில் நிதியில் ரூ.43 லட்சத்து 50 ஆயிரமும், ஆணையர் பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.87 லட்சம் நிதியில், சுமார் 40 டன் எடையில், 19 அடி அகலத்திலும், மரத்தேர் மட்டும் 21 அடி உயரத்திலும், அலங்காரத்துடன் 48 அடி உயரத்தில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த தேர் வரும் 2025-ம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெற வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.