“மக்களே! சலாம் எனும் சாந்தியை பரப்புங்கள். பசித்தவருக்கு உணவளியுங்கள்; உறவுகளுடன் உறவாடி வாழுங்கள். மக்கள் துயில் கொள்ளும் நேரம் இறைவனை தொழுங்கள். சுவனில் நிம்மதியாக நுழைவீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த மத நல்லிணக்க பரப்புரையை நபி (ஸல்) அவர்கள், மதீனாவில் காலடி எடுத்துவைத்த உடன் முதன்முதலாக கூறினார்கள்.
இஸ்லாமியப் பார்வையில் நிதியுதவி வழங்கல் திட்டம் இருவகை. ஒன்று ‘ஸதகா’ எனும் தர்ம நிதி; மற்றொன்று ‘ஜகாத்’ எனும் ஏழை வரி, ரமலான் நோன்பு கடமையான ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில்தான் ஜகாத்தும் கடமையாக்கப்பட்டது. ‘ஸதகா’ எனும் தர்மத்தை புனிதரமலானில் சகோதர சமுதாயத்தவர்கள் பெற்று மகிழ்ச்சி கொள்கின்றனர். ‘ஜகாத்’ எனும் ஏழை வரி வாங்கும் தகுதியுள்ளவர்களைப் பற்றி இஸ்லாம் பின்வருமாறு பட்டியலிடுகிறது.
“ஜகாத் எனும் நிதி வறியவர்கள். நிதியை வசூலிக்கும் ஊழியர்கள், எவர்களுடைய இதயங்கள்(இஸ்லாத்தின்பால்) ஈர்க்கப்படு கின்றனவோ அவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனாளிகள், அல்லாஹ்வின் பாதையில் (அறப் போராட்டத்தில்) உள்ளவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு உரியவை. இது அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் நன்கறியவன் மிக்க ஞானமானவன்.”
நோன்புப் பெருநாள் அன்றுவழங்கப்படும் தானிய அறத்துக்கு ‘ஜகாதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தர்மம் என்று கூறப்படுகிறது. ஒருவர் நோன்பு நோற்கும்போது ஏற்படும் சிறுசிறு தவறுகளால், அந்த நோன்பு விண்ணை எட்டாமல் இடையே தடுத்து நிறுத்தப்படுகின்றன.
நோன்பு பெருநாள் அன்று தர்மம் கொடுப்பது அத்தகைய தடையை அகற்றி அவற்றை விண்ணுலகை அடையச் செய்கின்றது. மேலும் நோன்பின் குறைகளையும் அதுசுத்தப்படுத்துகின்றது. ‘சதகத்துல் பித்ரு’ எனும் இந்தப் பெருநாள் தர்மத்தை ஏழை முஸ்லிம்களுக்கு, நாம் உண்ணும் உணவு தானியங்களிலிருந்து வழங்கிட வேண்டும். (ஹனஃபீ மத்ஹபில்) 1.600 கிராம் தானியம் அல்லது அதன் கிரயம் ரூ.80. ஷாபிஈ மத்ஹபில் 2.400 கிராம் தானியம் கிரயம் கிடையாது. சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பெருநாள் அன்று தர்மத்தை பெற்று மகிழ்ச்சி கொள்கின்றனர்.
நோன்பு பெருநாள் ஒரு சமயநல்லிணக்கப் பண்டிகை ஆகும்.ஒருவருக்கொருவர் சாதி, மத,பேதம் பார்க்காமல் அனைவருக்கும் வாழ்த்துகளை மனமாரப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் தமது வீட்டு பண்டங்களையும், ருசியான உணவு வகைகளையும் அண்டை அயலாருக்கு பகிர்ந்து உண்ண வேண்டும். பசித்தவருக்கு வழங்க வேண்டும். புத்தாடை அணிந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஆடை இல்லாதவருக்கு ஆடை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
பெருநாள் சிறப்புத் தொழுகையின்போது முஸ்லிம்கள் சமய நல்லிணக்கம் மென்மேலும் வளர சிறப்பு பிரார்த்தனை செய்வார்கள். இல்லாதோருக்கு வழங்கியும், எல்லோரிடமும் இணங்கியும் வாழ்வதுதான். இஸ்லாத்தின் அடிப்படை தத்துவம். இவற்றுக்கு மாறு செய்யக்கூடாது.
கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றைஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள், பெருநாளிலும் தூதுக் குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்” என்றார்கள். சிறிது காலம் கடந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் பட்டுக் குளிராடை ஒன்றை ஹள்ரத் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
அதை எடுத்துக் கொண்டு ஹள்ரத் உமர் (ரலி) நபியிடம் வந்து,“அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமைப்) பேறு பெறாதவர்களின் ஆடை எனக் கூறிவிட்டு இதை ஏன்எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர் கள்” எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இதை நீர்விற்றுக்கொள்ளும்! அல்லது இதன்மூலம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும்“ என்றார்கள்.
நபிகளார் கொடுத்தனுப்பிய அந்த பட்டுக் குளிராடையை ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் தமதுமுஸ்லிம் அல்லாத நண்பருக்குஅன்பளிப்பு செய்தார்கள். இத்தகைய சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கக் கூடிய நட்பை நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர் களும் ஆதரித்திருக்கிறார்கள்.
“நோன்பு, தர்மம், தொழுகை இவற்றின் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் தங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என நபி (ஸல்)அவர்கள் கேட்டார்கள் “ஆம்! அறிவியுங்கள்” என நபித்தோழர்கள் வேண்டினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “இரு சமூகங் களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது ஆகும்“ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாத்தில் சிறந்தது இணக்கமாக வாழ்வதுதான்... இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளும் நல்லிணக்கத்தைத்தான் பிரதிபலிக்கிறது. நோன்பு என்பது பிறைமுதல்பெருநாள் வரை சமூக நல்லிணக்கத்தை தான் அதிகம் வலியுறுத்துகிறது. நாம் கொண்டாடும் பெருநாள் பண்டிகையும் ‘ஒன்றே குலம்,ஒருவனே தேவன்’ என்ற உயர்ந்தபண்பாட்டையும் சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம், அன்பு, கருணை, ஈகை, சாந்தி, சகிப்புத்தன்மை அரவணைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம், பல்சமய நல்லிணக்கம், உலக அமைதி ஆகியவற்றை அன்புடன் போதிக்கிறது.
ஈத் முபாரக்!
Dr. S.சபீர் அப்துல்லா
தலைவர், அட்டாமா
காரைக்குடி