கெங்க வராகநதீஸ்வரர் | படங்கள் எம். சாம்ராஜ் 
ஆன்மிகம்

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதி புஷ்கரணி விழா: மே 3 வரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய வாய்ப்பு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி திருக்காஞ்சி சங்கராபரணியில் முதல் முறையாக ஆதி புஷ்கரணி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நாளை முதல் மே 3 வரை 12 நாட்களுக்கு நடக்கிறது. தினமும் மாலையில் கங்கா ஆரத்தி நடக்கிறது.

நவகிரகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் குரு பகவான் செல்லும் ராசியை கணக்கிட்டு, அந்த ராசிக்குரிய நதிகளுக்கு புஷ்கரணி விழா நடத்தப்படும், மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் நாளை சனிக்கிழமை பெயர்ச்சி அடைகிறார், இதனையொட்டி, மேஷ ராசிக்குரிய நதிகளான கங்கை, புதுவை விலலியனூர் சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா முதல்முறையாக நடைபெறுகிறது, சங்கராபரணி ஆறு வடக்கு நோக்கி பாய்வதாலும் கங்கைக்கு நிகரானது என்பதாலும் இந்த புஷ்கரணி விழா மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புஷ்கரணி விழாவிற்காக சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள திருக்காஞ்சி கெங்கை வராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய பகுதிகள் அழகுப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் புனித நீராடுவதற்காக வசதியாக படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. புஷ்கரணி விழா நாளை முதல் மே மாதம் 3ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோயிலுக்கும், ஆற்றுக்கும் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது, புதிய சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது, விழாவின் தொடக்கமாக இன்று அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மாலை மிருத்சங்கிரஹணம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், சப்தநதி தீர்த்த கலச பிரதிஷ்டை, முதல் கால யாகம், பூர்ணாஹீதி தீபாராதனை ஆகியவை நடந்தது.

திருக்காஞ்சி திருக்கோயில்

நாளை காலை மங்கல இசையுடன் தொடங்கும் விழாவில், கோபூஜை கொடியேற்றமும், காலை 7,15க்கு 2ம் கால கலச பூஜையும், 9,15 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடக்கிறது, காலை 9,41 மணிக்கு புஷ்கரணம் பிறக்கும் நேரத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள், திருவாடுதுறை ஆதினம், மயிலம் பொம்மபுர ஆதினம் உள்ளிட்ட மடங்களின் மடாதிபதிகள் ஆதினங்கள் குருமகா சன்னிதானங்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் புனித நீராடலை தொடங்கி வைக்கின்றனர்.

இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரசியல்கட்சி பிரமுகர்கள், உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். நாள்தோறும் காலை 9 மணிக்கு மகாயாகம் நடக்கிறது. மேலும், தினமும் வேதபாராயணம், திருமுறை பராயணமும், மாலையில் 6 மணிக்கு கங்கா ஆரத்தியும் நடக்கிறது, விழாவையொட்டி தினமும் கலைநிகழ்சசி நடைபெற உள்ளது, பக்தர்களுக்கு வழிகாட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, பக்தர்கள் வழிகாட்டிகளை அடையாளம் காணும் வகையில் வழிகாட்டிகளுக்கு பச்சை வேட்டி, வெள்ளை சட்டை சீருடையும் அளிக்கப்பட்டுள்ளது.

திருக்காஞ்சி திருக்கோயில் சங்கராபரணியில் நடக்கும் கங்கா ஆரத்தி

நீராடும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 40 மீனவர்கள் உயிர்காக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். விழாவிற்கு பொதுமக்கள் எளிதாக வர பி.ஆர்.டி.சி.,மூலமாக கூடுதல் பஸ்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திருக்காஞ்சியில் அமைந்துள்ள காசிவிசுவநாதர் கோவிலில் இருந்து,கெங்க வராக நதீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக 5 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. கோடை வெயிலில் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க பந்தல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2 ஷிப்டுகளாக 200 போலீஸாரும், கூடுதலாக ஐஆர்பிஎன் காவலர்களும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT