சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள். (உள்படம்) தேரில் எழுந்தருளிய அம்மன். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன் 
ஆன்மிகம்

‘ஓம் சக்தி, பராசக்தி’ பக்தி முழக்கத்துடன் சமயபுரம் கோயிலில் சித்திரை தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘ஓம் சக்தி, பராசக்தி’ என்ற பக்தி முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற அம்மன் திருத்தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. இக்கோயிலுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும் ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைப் பெருந்திருவிழா நிகழாண்டு ஏப்.9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து உற்சவ அம்மன் தினந்தோறும் காலையில் புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு அபிஷேகம் கண்டருளினார். தினமும் இரவில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் 10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். தேரில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டு காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ஓம் சக்தி, பராசக்தி’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் கோயிலின் தேரோடும் வீதிகளில் வலம் வந்து பிற்பகல் 3 மணியளவில் நிலையை அடைந்தது.

தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், அக்னி சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தேரோட்டத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை முதலே ஏராளமான பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, திருவானைக்காவல், நம்பர் 1 டோல்கேட், பளூர், சமயபுரம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர்மோர், குளிர்பானங்கள், குடிநீர், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி மற்றும் அலுவலர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT