ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழாவின் தொடக்கமாக நேற்று நடைபெற்ற கொடியேற்றம். (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள். 
ஆன்மிகம்

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம்

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு இவ்விழாவின் தொடக்கமாக நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தார். அங்கு காலை 6.45 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நம்பெருமாள் கொடிமண்டபத்திலிருந்து புறப்பட்டு கண்ணாடி அறை சேர்ந்தார். மாலை 4.30 மணிக்கு பேரிதாடனம் நடைபெற்றது.

பின்னர், மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளை வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்தை அடைந்தார். அங்கிருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, யாகசாலைக்கு சென்றார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று (ஏப்.12) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறைக்குச் சென்றார்.

தொடர்ந்து, நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ளது. 20-ம் தேதி சப்தாவரணமும், 21-ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும்.

இத்துடன் சித்திரை தேர்த் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT